Saturday, February 28, 2009

இறைவனுக்கு உருவம் உண்டா, இல்லையா?



இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான்.

இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.

இதே செய்தியை ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு குட்டிக் கதையின் மூலமாக இப்படியும் விளக்குகிறார் -

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது சின்ன விலங்கொன்றைப் பார்த்தான்.திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற விலங்கைப் பார்த்ததாகச் சொன்னான்.

அதைக் கேட்ட அம்மனிதன், "நானும் காட்டுக்குள் போன போது அந்த விலங்கைப் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?" என்றான்.

அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த விலங்கின் நிறம் மஞ்சள் என்றும் தெரிவித்தான்.

இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த விலங்கைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது.விவாதத்துக்கு தீர்வு காணவென்று அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.

அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், "ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் விலங்கைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த விலங்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி", என்று தெரிவித்தான்.

இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் செய்திகள் ஒவ்வொன்றும் எக்காலத்திற்கும் பொருந்துவன. அந்தக் காலத்திலேயே இறைவன் ஒருவனே என்றும், பலவித மதங்களும் ஒரே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு வழிகளே என்றும் அனுபவபூர்வமாக உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தியவர். மற்றவர்களுடைய நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்றும் அப்போதே அறிவுறுத்தியிருக்கிறார்.

இறைவன் முக்குணங்களுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டவன். மனித உணர்வுகளுக்குத் தகுந்தாற்போல நாமே அவனுக்கு உருவங்களையும், குணங்களையும் கற்பித்துக் கொண்டு, பிறகு நாமே அடித்துக் கொள்கிறோம். நமக்குப் பிடித்த மாதிரி இறைவனை வணங்குவதில் தவறே இல்லை. இன்னும் சொல்லப் போனால், அது அவரவருடைய உரிமை. அதற்காக நம்மைக் கேலி செய்யவோ தாழ்த்திப் பேசவோ எவருக்கும் உரிமை இல்லை.

அதே சமயம், நாமும் பிறருடைய நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறரைக் கேலி செய்யவும் தாழ்த்திப் பேசவும் நமக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை உணர்ந்து கொண்டு விட்டாலே, எந்த வித பிரச்சனையும் வராது.

No comments:

Post a Comment